· article

ஒளடதங் குறை

உயிரெழுத்துக்களின் வரிசையில் “ஔ” என்ற எழுத்தில் துவங்கக் கூடிய சொற்கள் மிகக் குறைவாகத்தான் இருக்கின்றன. நம்மிடம் “ஔ” என்ற எழுத்தில் தொடங்கும் ஏதாவது ஒரு சொல் தெரியுமா என்று கேட்டால், நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது ஔவை என்னும் சொல்தான். சற்றே சிந்தித்துப் பார்த்தால் நமக்கு தெரிந்த ஒரே சொல்லும் அதுவாகத்தான் இருக்கும். பெரும்பாலும் “ஔ” என்னும் எழுத்து நம்மிடம் பயன்படுத்தாமல் வழக்கொழிந்து போய்விட்டது. இதை நன்கு உணர்ந்தவரான நம் “மகாகவி” புதிய ஆத்திச்சூடியில் “ஔ” என்ற எழுத்தில் துவங்கக்கூடிய தலைப்பு, காலத்தையும் வென்று நிற்கும், மனித வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒரு வசனமாக “ஔடதங் குறை” என்று வலியுறுத்துகிறார்.

சமஸ்கிருத வார்த்தையான “ஔஷதம்” என்னும் சொல்லுக்கு “மருந்து” என்பது பொருள். முற்காலத்தில் மூலிகைகளைக் கொண்டு தான் மருந்து தயாரிக்கப் பட்டது. ஓஷதி என்றால் மூலிகை, அதனை அடிப்படையாகக் கொண்டு பிறந்த சொல்தான் ஔஷதம். காலப்போக்கில் இந்த வடமொழிச் சொல்லான ஔஷதம், ஔடதம் என்று தமிழ் படுத்தப்பட்டிருக்கிறது. ஔடதம் என்பது மருந்துகள் மூலம் குணமாக்கிக் கொள்ளும் மருத்துவ சாஸ்திரம்.

நோய் வருவதற்கு பல காரணங்கள் உண்டு, அதில் உணவும் ஒரு காரணம். எனவே திருவள்ளுவர் மருந்து என்ற அதிகாரத்தில் நோய் வராமல் இருக்க, உணவு உண்ணும் ஒழுங்குமுறைகளை எடுத்துரைக்கிறார்.

“இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.”

அளவோடு உண்பவன் உடல் நலத்தோடு இன்பமுற்று வாழ்வது போல, அளவறியாமல் உண்பவன் நோய்க்கு ஆளாவதும், துன்பமுற்று வாழ்வதும் இயற்கை, என்கிறார் தெய்வப்புலவர்.

எனவே ஒருவனுக்கு நோய் வந்த பிறகுதான் மருந்தின் தேவை ஏற்படுகிறது ஆகையால் நாம் வள்ளுவர் மருந்து என்ற அதிகாரத்தில் அறிவுறுத்தியதை உணர்ந்து ஒருவன் தன் உடலை நோய் வராமல் காத்து, மருந்தை பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும் என்கிறார் பாரதி.

“விருந்தும் மருந்தும் மூன்று நாள்” என்று ஒரு பழமொழி உண்டு விருந்தையும் மருந்தையும் .மூன்று நாட்களுக்கு மேல் உட்கொள்ளக் கூடாது என்பதுதான் அதன் அர்த்தம். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல அளவுக்கு அதிகமாக மருந்து சாப்பிட்டாலும் அதுவே உடலுக்கு தீங்கு விளைவித்து, உன் உடலை வலுவிழக்கச் செய்யும். எனவே நீ மருந்தை நாடுவதை குறைத்து, உன் உடலை நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் பாரதி.

இயற்கையாகவே நம்முடைய உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி இருக்கிறது.. நாம் அளவுக்கு அதிகமாக மருந்து சாப்பிடும் போது அந்த நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து நம்முடைய உடல் மருந்துக்கு தன்னை பழகிக் கொண்டு, தானாகவே நோயைச் சரி செய்யும் இயற்கைத் தன்மையை நம் உடல் இழந்து விடுகிறது. இதை உணர்ந்து நாம் ஒவ்வொருவரும் நம் உடலை நேசிக்க கூடியவராய் பாரதி கண்ட புதியதோர் உலகத்தை காண பயணிப்போம் தணல் வழியே! காரணம் தணல் “கற்றதை கற்பிக்கச் சொல்லும் கல்வியின் குரல்.”